தி.மலையில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த - காய்கறி மற்றும் பூக்கள் விற்பனை அங்காடிகள் இடமாற்றம் : கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காய்கறி விற்பனை அங்காடி மற்றும் பூக்கள் விற்பனை அங்காடி இன்று முதல் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

தி.மலை நகரம் கடலை கடை சந்திப்பு அருகே காய்கறி அங்காடியும், தேரடி வீதியில் ஜோதி பூக்கள் விற்பனை அங்காடி இயங்கி வருகிறது. இந்த இரண்டு அங்காடி களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இடநெருக்கடி காரணமாக, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

இதையடுத்து, காய்கறி அங்காடி மற்றும் பூக்கள் விற்பனை அங்காடி ஆகியவற்றை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஈசான்ய மைதானம் மற்றும் திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறி கடைகளை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை செய்யவும் முடிவானது.

இந்நிலையில், காய்கறி விற்பனை அங்காடி மற்றும் பூக்கள் விற்பனை அங்காடிகளை கோட்டாட்சியர் வெற்றிவேல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் வியாபாரிகளிடம், “இடநெருக்கடி காரணமாக மக்கள் அதிகளவில் கூடுவதால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காய்கறி அங்காடியில் உள்ள கடைகளை, இரண்டு குழுக்களாக பிரித்து இரு இடங்களில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், மத்திய பேருந்து நிலையத்தில், பூக்கள் விற்பனை செய்யவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கோட்டாட்சியர் வெற்றிவேல் கூறும்போது, “கரோனா தொற்று பரவலை தடுக்க ஈசான்ய மைதானம் மற்றும் திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறி அங்காடிகள் நாளை(இன்று) முதல் செயல்படும். அதேபோல், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 103 பூக்கள் விற்பனை கடைகள் இயங்கும். அவர்களுக்கான இடம், சமூக இடைவெளியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்