நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் முழு ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழக அரசு கரோனா தொற்றை தடுக்கும் வகையில் இன்று முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும்வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள்ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் த.கா.சித்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago