இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைகளில் திரண்டனர்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்குஅமல்படுத்தப்படுகிறது. தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும்கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கலாம்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். விடுதிகள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகியவற்றில் காலை 6 மணி முதல் 10 வரையிலும், மதியம்12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 முதல் 9 மணி வரையும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கலாம். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும். மருந்தகங்கள் செயல்படலாம். மற்ற கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளகடைகளுக்கு ஏராளமான மக்கள் சென்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருநெல்வேலி டவுன் சந்தை, பாளையங்கோட்டையில் உள்ள காந்தி தினசரி சந்தை, மகாராஜநகர் மற்றும் மேலப்பாளையத்தில் செயல்படும் உழவர் சந்தையில் உள்ள கடைகளில் மக்கள் குவிந்தனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், களக்காடு, வள்ளியூர், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், நாங்குநேரி, கடையம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இறைச்சிக் கடைகள், சலூன்களிலும் நேற்று கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ஊரடங்கு காரணமாக சென்னை, திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் தென்மாவட்டங்களுக்கு வந்த பலரும் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர். இதனால் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தை, வஉசி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல பலசரக்கு கடைகள், ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்களிலும் கூட்டம் அதிகமிருந்தது. கடந்த 15 நாட்களாக மூடப்பட்டிருந்த சலூன் கடைகளை கடந்த 2 நாட்களாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சலூன் கடைகளிலும் நேற்று கூட்டம் காணப்பட்டது.மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் தூத்துக்குடி நகரின் அனைத்து பிரதான சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பிரதான சாலை, கிருஷ்ணன் கோவில் சாலை, மாதாங்கோவில் தெரு, தேரடி தெரு, மார்க்கெட் சாலை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மக்கள் அதிகளவில் வந்தனர். மோட்டார் சைக்கிளில் மக்கள் வந்ததால் மார்க்கெட் சாலையிலும், மார்க்கெட் உட்பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வருவோரை போக்குவரத்து போலீஸார் அனுமதிக்கவில்லை.வீடுகளில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளை வைத்துள்ளவர்கள், பிரதான சாலையில் உள்ள பெரிய ஜவுளிகடைகளுக்கு வேன்களில் வந்து, துணிகள் எடுத்துச்சென்றனர். பெரும்பாலான மக்கள் மளிகை பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமிருந்தது.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இறைச்சி கடைகள், சலூன் கடைகள் திறந்திருந்தன. கூட்டம் அதிகமிருந்ததால் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை, ஒழுகினசேரி அப்டா சந்தைகளில் காய்கறி வாங்க மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கோட்டாறு மார்க்கெட்டிலும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் மது பானங்களை வாங்கினர். நாகர்கோவிலில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் கூட்டம் அலைமோதியது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago