வேலூர் மாவட்டத்துக்கு - 7 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தன : 2-வது தவணை போடுபவர்களுக்கு முன்னுரிமை

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்று வந்தடைந்தன. 2-வது தவணை போடுபவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என சுகாதாரத்துறை அறிவித் துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதி தீவிரமாக பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எந்த மருத்துவ மனையிலும் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. அப்படியே படுக்கை வழங்கப்பட்டாலும், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி கிடைப்பது அரிதாக உள்ளது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மூச்சு விட சிரமப்பட்டு உயிருக்கு போராடி வருபவர்களுக்கு மட்டுமே படுக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு படுக்கை வசதி கிடைப்பது இல்லை.

கரோனா 2-வது அலையுடன் போராடும் மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால், அடுத்து வரும் 2 வாரங்களில் கரோனா பரவல் அதிகரித்து பேரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள நினைப்பவர்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்ட வேண்டும். கரோனா தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை, மக்கள் எந்தவித பயமுமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேண்டு கோள் விடுத்தார்.

வேலூர் மாவட்டத்தில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 45 வயதுக்கு குறைவானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 5 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்தன. அந்த மருந்துகள் கடந்த 3 நாட் களுக்கு முன்பு தீர்ந்துவிட்டன. இதையடுத்து, கரோனா தடுப்பூசி மருந்துகளை வேலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில், மாநில நல்வாழ்வு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, தடுப்பூசி தட்டுப்பாட்டால் வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போட செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சில தனியார் மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கரோனா தடுப்பூசி மருந்துகள் நேற்று வந்தடைந்தன. மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி வந்துள்ளதால் முதன் முறையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த மருந்துகள் ஒதுக்கப்படவில்லை.

ஏற்கெனவே தடுப்பூசி போட்ட வர்கள் 2-வது தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் உள்ளதால், தற்போது வந்துள்ள 7 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் 2-வது முறை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அதிகம் வரும் என எதிர்பார்த்தோம், ஆனால், குறைவாக வந்துள்ளன.

எனவே, 45 வயதுக்கு மேற் பட்டவராக இருந்தாலும் முதல் முறையாக தடுப்பூசி போட யாரும் வரவேண்டாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2-வது முறை தடுப்பூசி போடப் படுகிறது. இது தவிர ஏற்கெனவே கடந்த மாதம் சிறப்பு முகாம் நடந்த பகுதிகளிலும் 2-வது தடுப்பூசி செலுத்துவதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு அங்கு 2-ம் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்