திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினரும், கொமதேக பொதுச்செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் தேவையான வசதிகள் உள்ளதா, கரோனா நோயாளிக்கான படுக்கை வசதிகள், கூடுதல் படுக்கை வசதிகளுக்கு என்ன செய்ய வேண்டும், ஆக்சிஜன் தேவை மற்றும் இருப்பு ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஈஸ்வரன் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையை பொறுத்தவரை இப்போதைக்கு ஆக்சிஜன் பிரச்சினை எதுவும் இல்லை. ஆக்சிஜன் இருப்பு வைக்க கூடுதலாக கொள்கலன் வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர்கள் சார்பாக வைத்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சிப்பேன்.
திருச்செங்கோட்டில் சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களை ஈரோடு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, தலைமை மருத்துவர் தேன்மொழி, கரோனா சிகிச்சை பிரிவு மருத்துவர் சத்தியபானு, மருத்துவர் மோகன பானு ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago