குமராட்சி பகுதியில் குறுவை நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது.
அனைத்து போர்வெல்களிலும் தண்ணீர் போதுமான அளவு ஊற்றெடுத்து உள்ளது. இதனைப் பயன்படுத்தி போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் நேரடி குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக ஜூன்,ஜூலை மாதங்களில் காவிரி நீர் கிடைக்கப் பெறும். இதனால் போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள் மே மாதத்தில் நாற்றங்கால் சீரமைத்து நாற்றுவிட்டு குறுவை நெல் சாகுபடியை தொடங்குவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் வயல்களில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டிராக்டரால் கோடை உழவு செய்து, அதன் பின்னர் இந்த வயலுக்கு போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சி அதன் பிறகு நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுகின்றனர்.
தற்போது குமராட்சி பகுதியில் குமராட்சி, கீழக்கரை, முள்ளங்குடி, நலன்புத்தூர், பருத்திகுடி, அத்திப்பாட்டு, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நளன்புத்தூர் விவசாயிகள் கூறுகையில், "நாற்றங்கால் விட்டு நடவு செய்தால், தற்போது நிலவி வரும் ஆள் பற்றாக்குறையால் அதிக கூலி வழங்க வேண்டியுள்ளது. மற்ற செலவுகளும் அதிகமாகிறது.
ஆனால் நேரடி நெல் விதைப்பில் செலவு குறைவு. அதனால்தான் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை நேரடி நெல் விதைப்பின் மூலம் செய்து வருகிறோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago