அத்தியாவசிய பணிக்குச் செல்லும்அரசு ஊழியர்களும், முக்கிய ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலைக்குச் சென்றுவர முக்கியமான வழித்தடங்களில் காலை, மாலையில் அரசுப் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் நாளை (10-ம் தேதி)முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவத் துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும்ஆலைகள், நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பணிபுரிவோர், வேலைக்குச் சென்றுவர தேவையான போக்குவரத்து வசதிகளை துறைத் தலைவர்கள் செய்து தர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மட்டும் சில முக்கியமான வழித்தடங்களில் காலை, மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையுடன் பேருந்தில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் வேலைக்குச் சென்று வர ஏதுவாக காலை, மாலையில் முக்கியமான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் சென்று வர பேருந்து பயணத்தையே நம்பியுள்ளனர். எனவே, தென்காசியில் இருந்து திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான்குளம், பாபநாசம்போன்ற முக்கியமான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின் றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago