கடலூர் மாவட்டத்தில் - கரோனா தாக்கம் அதிகரிப்பு: அலட்சியம் வேண்டாம் : சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது.அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று கடலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 5-ம் தேதி 296 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். கடந்த 6-ம் தேதி 336 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் கூறியது:

கரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட சற்று வீரியத்துடன் காணப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல், இருமல், சளியை விட தலைவலி அதிகமாக இருக்கிறது.

இளைஞர்களுக்கு பாதிப்பு

உடல் சோர்வு அதிகம் காணப்படுகிறது. தற்போது பரவும் கரோனாவில் இளைஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆகவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

ஒரு சிலர் காய்ச்சல், இருமல்வந்தால் டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு செய்யக் கூடாது. உடனே அருகில் இருக்கும் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சுய மருந்து எடுத்து, நோய்த்தொற்று அதிகமாகி நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் போய் விடும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

கரோனா பரிசோதனை செய்தால், நம்மை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வார்கள் என்ற பயம் வேண்டாம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம். அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்