பாவூர்சத்திரம் சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு : கட்டுப்பாடுகளால் வியாபாரம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

வரத்து குறைவு காரணமாக பாவூர்சத்திரம் சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் காய்கறிகள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் மொத்த விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. வியாபாரிகள் ஏலத்தில் காய்கறிகளை வாங்கிச் சென்று சில்லறை விலைக்கு விற்பனை செய்கின்றனர். கரோனா பரவல் காரணமாகஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறும்போது, “சந்தையில் சில்லறை விற்பனை காய்கறி கடைகள் மதியம் 12 மணிக்கு மூடப்படுகின்றன. விவசாயிகள் மதியத்துக்கு மேல் காய்கறிகளை அறுவடை செய்து, சந்தைக்கு கொண்டுவருவது வழக்கம். எனவே ,மொத்த வியாபாரம் நடைபெறும் கடைகளில் மாலை 3 மணி வரை வியாபாரம் செய்துகொள்ள அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இரவு 10 மணி வரை வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி அனுப்ப அனுமதி அளித்துள்ளனர்.

கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாலும், தமிழகத்தில் மதியம் 12 மணி வரை மட்டுமே காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சாம்பார் வைக்க பயன்படுத்தும் அத்தியாவசிய காய்கறிகளான கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், சின்ன வெங்காயம் போன்ற சில வகை காய்கறிகள் மட்டுமே வியாபாரம் ஆகிறது. கூட்டு, பொரியலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காய், சுரைக்காய், பீன்ஸ், புடலங்காய், பாகற்காய் போன்ற காய்கறி வகைகள் விற்பனையாவதில்லை.

கடந்த ஆண்டு கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையான சேம்பு தற்போது 5 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு 20 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 15 முதல் 20 ரூபாய் வரையும், மாங்காய் 10 ரூபாய்க்கும், மாம்பழம் 10 முதல் 20 ரூபாய்க்கும், தேங்காய் கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 15 ரூபாய்க்கும், மிளகாய் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை 20 முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனையாகிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்