கரோனா தொற்று பரவலைத் தடுக்க நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பகல் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு போல கடைவீதிகள் வெறிச்சோடின.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 6-ம் தேதிமுதல் 20-ம் தேதி வரை மளிகை, காய்கறி, தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும், மற்ற கடைகள் எதுவும் இயங்க அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. மளிகை, காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்க ஏராளமானோர் திரண்டனர். டீக்கடைகளிலும், உணவகங்களிலும் பார்சல் மட்டும் வழங் கப்பட்டது. வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பகல் 12 மணிக்குப் பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இதனால், மாநகரில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பெரிய கடைவீதி, ரங்கே கவுடர் வீதி, ஒப்ப ணக்கார வீதி, ராஜ வீதி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை, நூறடிசாலை உள்ளிட்ட இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி முழு ஊரடங்கு போல வெறிச்சோடின.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நேற்று முதல் 50 சதவீதம்ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். வீட்டில் இருந்து பணிபுரியக்கூடிய ஊழியர்கள், அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள் ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் நேற்று50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். அரசின் இந்தபுதிய கட்டுப்பாடு கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர், காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்திலும் பகல்12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்களின் நடமாட்டம் குறைந்திருந்தது. காதர்பேட்டையில் செகண்ட் சேல்ஸ் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும், காதர்பேட்டை பகுதி வெறிச்சோடியது. மதியம் கடைகள் அடைக்கப்பட்ட பிறகு, தாராபுரம் சாலை, அவிநாசி சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியன் நிறுவனங்கள், மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் வழக்கம்போல இயங்கின.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் காய்கறிமற்றும் உணவுப் பொருட்களைவாங்க உழவர் சந்தை, மார்க்கெட்டில் மக்கள் திரண்டனர். பகல் 12 மணி ஆனதும், காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நகர் முழுவதும் ரோந்து வந்து, கடைகளை அடைக்க ஒலிப்பெருக்கி மூலமாக அறிவித்தனர். கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டதால், மக்கள் நட மாட்டம் குறைந்தது. பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் ஆகிய பொது போக்குவரத்து இயங்கின.
இந்நிலையில், குன்னூரில் உள்ள பேக்கரியில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்கள் விநியோகிப்பட்டதால், அந்த பேக்கரி உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago