கரோனா பரவலை தடுக்க முன்னுரிமை பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை நடத்துவதை உறுதி செய்திட வேண்டும். நடமாடும் பிசிஆர் பரிசோதனை காய்ச்சல் முகாம், தடுப்பூசி முகாம் அனைத்து இடங்களிலும் தொடர்ச்சியாக நடத்திட வேண்டும். தடுப்பூசிகள் தங்கு தடையின்றி மருத்துவமனைகளில் போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்து மாவட்ட, வட்டஅரசு மருத்துவமனைகளில் கிடைக்க போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் பிளான்ட் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனோ வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.மண்டபங்கள், கல்வி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் அதிகரிக்க வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனை செயல்பாட்டை கண்காணிக்க குழு அமைத்து பார்வையிட வேண்டும்.கிராமங்களில் ஊராட்சி தலைவர்களை இப்பணிகளுக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago