திருப்பத்தூர் மாவட்டத்தில் வங்கி காலிப்பணியிடம் மற்றும் போட்டி தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10-ம் தேதி முதல் இணையதளம் மூலம் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வங்கி காலி பணியிடங்களுக்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
தற்போது, கரோனா பரவல்காரணமாக பல்வேறு கட்டுப்பாடு களுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் நேரடியாக வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, கிராமம் மற்றும் நகர்புற மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பயன்பெறும் வகையில் இணையதளம் வாயிலாக வேலை வாய்ப்பு துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அதன் அடிப்படையில் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதள காணொலி வழிகற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. எனவே, பயிற்சி பெற விரும்புவோர் தங்களது பெயர், தாய், தந்தை பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், வேலை வாய்ப்பு பதிவு எண் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு, பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
அதன் மூலம் தேர்வுக்கு தயாராகுவோர் தங்களுக்கான பயிற்சியை தேர்ந்தெடுத்து, அதில் வரும் பாடக்குறிப்பினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது, இந்த இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் மே 10-ம் தேதி முதல் தொடங்க உள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 04179-222033 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago