வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் : ஆட்சியர்கள் சண்முகசுந்தரம், சிவன் அருள் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேலூர், திருப்பத் தூர் மாவட்டங்களில் அரசு வழிகாட்டுதல் படி இன்று முதல் வரும் 20-ம் தேதி அதிகாலை 4 மணி வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா 2-வது அலை தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் நாளொன்றுக்கு 5 அல்லது 6-ஆக இருந்த கரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது 700-ஐ கடந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

எனவே, வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. ஏற்கெனவே, இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் 60 விழுக்காட்டுக்கு மேல் நிரம்பி யுள்ளன. எனவே, பெருகி வரும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள புதிய கட்டுப்பாடுகள் வேலூர் மாவட்டத்தில் இன்று (6-ம் தேதி) அதிகாலை 4 மணி முதல் மே 20-ம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலுக்கு வர உள்ளன. அதன் விவரம்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கலாம். ரயில், பேருந்து, வாடகை வாகனங்களில் 50 சதவீதம் இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கலாம்.

3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறிகடைகள் திறக்க அனுமதியில்லை. அதேநேரத்தில் தனியாக செயல்படுகிற மளிகை மற்றும் காய்கறி விற்பனைகடைகள் 50 சதவீதப்பணியாளர்களுடன் முகக்கவசம் அணிந்தபடி பகல் 12 மணி வரை இயங்கலாம்.

கரோனா விதிமுறைகளை மீறினால் முதல் முறை கடும் அபராதமும், 2-வது முறை கடைக்கு ‘சீல்' வைக்கப்படும். பால் விற்பனையகம், மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படலாம்.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான மளிகைக்கடை, காய்கறி கடை, மருந்து மற்றும் பால் விற்பனை, பெட்ரோல் பங்க் தவிர மற்ற அனைத்து கடைகளும் மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும் அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து தேநீர் கடைகளும், பேக்கரி கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உள் அரங்கம், திறந்த வெளி விளையாட்டு நிகழ்ச்சி, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அனுமதியில்லை. தியேட்டர்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது. இறுதிச்சடங்கு, இறப்பு நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அதேபோல, திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதி களில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராமப்பகுதியில் உள்ள அழகு நிலையங்களும் திறக்க அனுமதியில்லை. அவசர மருத்துவ தேவை, ரயில் நிலையம் செல்வோர் வாடகை வாகனங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஊடகம் மற்றும் பத்திரிகை துறை யினர் இரவிலும் தொடர்ந்து செயல் படலாம். அதேபோல, தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படு கிறது. இந்நிறுவனங்களில் இரவு நேரப்பணிக்கு செல்லும் பணியாளர்கள் அந்நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருந்தால் அவர்கள் வீட்டில் இருந்து பணியிடங்களுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்ப அனுமதி வழங்கப்படும். மேலும், தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை நிறுவனங்களில் இரவு நேரப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் படுகிறது.

டேட்டா சென்டர், பராமரிப்புப் பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல, கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பதுஉள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வும் அனுமதி வழங்கப்படுகிறது.

முழு ஊரடங்கின்போது பால் விநியோகம், தினசரி பத்திரிகை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற பணிகள், சரக்கு வாகனங்கள், விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் தடையில்லாமல் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள மீன்கடைகள், இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடை களை திறக்க அனுமதியில்லை.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 80 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், கூடுதலாக 40 ஆக்சிஜன் வசதியற்ற படுக்கைகள் அடுத்த 4 அல்லது 5 நாட்களில் உருவாக்கப்படும்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனை யில் கூடுதலாக 112 படுக்கைகளும், 12 ஐசியு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள் வெளியே வருவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வெளியே வர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு இருப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு, கரோனா தொற்றின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கரோனா பெருந்தொற்றை விரட்ட முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்திலும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மேற்கண்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப் படும் என ஆட்சியர் சிவன் அருள் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்