புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் இருந்து வந்ததால் மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கத்திரி வெயில் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் மதியத்துக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென்று கனமழை பெய்தது. காட்டுமன்னார்கோவில், புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்த திடீர் மழையால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
எதிர்பாராமல் பெய்த இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கத்திரி வெயில் தொடங்கிய அன்றே கனமழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago