காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று அதிக அளவில் இருப்பதால் அதை தடுக்கும் வகையில் நாள்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான மளிகை, காய்கறி கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கினால் அனைத்து வியாபாரிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
கடை வாடகை, மின் கட்டணம், தொழிலாளர் சம்பளம், வங்கிக் கடன்கள் செலுத்துதல் என இவைகளெல்லாம் தினசரி கடை திறந்து வியாபாரம் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அதுமட்டுமின்றி ரம்ஜான் திருநாள் வரப்போகும் நிலையிலும், இந்துக்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முகூர்த்த நாட்கள் வருகிற நிலையிலும், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கினால் மட்டுமே தேவைகளை பெற ஏதுவாக அமையும்.
எனவே, தமிழக அரசு பாகுபாடு பாராமல் அனைத்து கடைகளும் திறப்பதற்கு ஏதுவாக இந்த உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல், கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு வகுக்கும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி முழு ஒத்துழைப்பை வழங்க வணிகர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago