பண்ருட்டி அருகே கொய்யா சாகுபடி தீவிரம் :

By செய்திப்பிரிவு

பண்ருட்டி அருகே அதிகளவு கொய்யா பயிரிடப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் ஒன்றியம் ஒரையூர், நல்லூர்பாளையம் பகுதிகளில் கொய்யா அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. கொய்யா மகசூலை பெருக்க தற்போது கொய்யா மரக்கிளைகளை வளைத்து கட்டி மண் மூட்டைகளை தொங்க விடும் பணியில் தோட்ட பணியாளர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நல்லூர் பாளையம் விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், "கொய்யா பழம் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை பெற்று சுவையாக இருப்பதால் ‘ஏழைகளின் ஆப்பிள்‘ எனப்படுகிறது. கொய்யா சாகுபடியில் சில உத்திகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

கொய்யா மரங்களில் கவாத்துசெய்வதன் மூலம் பழத்தின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். காய்களை தாங்குவதற்கு ஏற்ப கிளைகளின் வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக தரைமட்டத்தில் இருந்து வெளியே வரும் தளிர்களை 30 செ.மீ வரை துண்டிக்க வேண்டும். வேர்களை கவாத்து செய்ய வேண்டும். வேர்களை வெளியே எடுத்து விடுவதன் மூலமும், சில சமயம் கிளைகளை வளைத்து விடுவதன் மூலமும், தேவையற்ற இலைகளை வெட்டி விடுவதன் மூலமும் பூக்களை அரும்ப செய்யலாம்.

பதியன், காற்றடுக்குதல் மற்றும் ஒட்டு கட்டுதல் மூலம் நடப்பட்ட மரங்கள் 2 முதல் 3 ஆண்டில் காய்க்க தொடங்கும். பொதுவாக, பழங்களை பழுக்கும் நிலையில் மரத்தில் தக்க வைக்கக் கூடாது, அடர்பச்சை நிறத்தில் இருந்து வெளிரிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும் போது அறுவடை செய்ய உகந்தது. ஒட்டு கட்டிய ஒரு மரத்தில் இருந்து 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஐந்தில் இருந்து 7 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். நாற்றுக்கள் மூலம் சாகுபடி செய்யப்படும் ஒரு மரத்தில் இருந்து 90 கிலோ பழங்கள் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்