திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 137 பேர் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெறும் 8 பேரை தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
திருப்பூரில் - பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கண்காணிக்கும் முகவர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் உள்ளிட்டோர், இன்று அதிகாலை முதல் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன்பின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. அனைத்து மேஜைகளிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று நேரம் என்பதால், அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதேபோல, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் உள்ளிட்டவைமையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்த முறை, 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் அலுவலர் மற்றும் உதவியாளர் வாக்குகளை எண்ணுவார்கள். வேட்பாளர்களின் முகவர்கள் அவற்றை குறிக்க பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளன. அலைபேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 500 அரசு ஊழியர்கள், 1000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், தேர்தல் அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் போலீஸார் 3000 பேர் வாக்கு எண்ணும் பணி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான கரோனா பரிசோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் சிலருக்கு தொற்றுஉறுதியானதால், அவர்கள் தேர்தல் பணிகளில் அனுமதிக்கப்படவில்லை.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் (அவிநாசி), பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்(தாராபுரம்), கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் (உடுமலை), முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (பல்லடம்), மு.பெ.சாமிநாதன் (காங்கயம்), சி.சண்முகவேலு (மடத்துக்குளம்), தற்போதைய எம்.எல்.ஏ.-க்கள் கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்) போட்டியிடு கின்றனர்.
முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அலுவலர்களுக்கு மையத்தில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைகளைவழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி மற்றும் தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago