தேனியில் வாக்கு எண்ணும் பணியை நான்கு தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிக்க உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 74 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த மாதம் 6-ம் தேதி நடந்த தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் உள்ள 11 லட்சத்து 25 ஆயிரத்து 638 வாக்காளர்களில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 264 பேர் வாக்களித்தனர்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி கூறியதாவது:
இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைத்து இந்த வாக்குகளை எண்ணப்படும். 4 தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க உள்ளனர். 92 உதவியாளர்கள், 92 கண்காணிப்பாளர்கள், 110 நுண்பார்வையாளர்கள், 70 துப்புரவுப் பணியாளர்கள், 70 அலுவலக உதவியாளர்கள் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் காலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்பாக அடையாள அட்டையுடன் வருகை தர வேண்டும்.
முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜையில் மட்டுமே பணியாற்ற வேண்டும். இன்று வாக்கு எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago