வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 954 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 489-ஆக இருந்தது. தற்போது, 2 ஆயிரத்து 512 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 384 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிகபட்ச பாதிப்பாக 282-ஆக இருந்தது. இந்தாண்டு அதையும் தாண்டி கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தினசரி 500-ஐ நெருங்கியுள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்களில் தடுப்பு களை ஏற்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று வரை 26 தெருக்களில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை தினசரி 300-க்கும் அதிகமாக உள்ளது. இவர்களில், கரோனா பாதிப்பு அதிகமான வர்கள் மட்டுமே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்படுகின்றனர்.
பாதிப்பு குறைந்தவர்கள் பென்ட் லேண்ட் அரசு மருத்துவமனையிலும், மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ள வர்கள் விஐடியில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 450 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா வார்டு உள்ளது. இதில், தற்போது 285 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி கொடுத்தால் பாதிப்பு அதிகமானவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவ மனை, நறுவி மற்றும் நாராயணி மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கு, அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் குறைவான பாதிப்பு உள்ளவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கி சிகிச்சை பெறலாம் அல்லது வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது வரை சுமார் 1,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில், சுமார் 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 146 பேர் விஐடி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர 954 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வேலூர் மாநகர பகுதியில் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்டறியப் பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர் களுக்கு உடல் நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில், அதிக பாதிப்புள்ளவர் களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், விஐடி பல்கலைக் கழகத்தில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர அறிகுறி இல்லாமலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 45 வயதுக்கு குறைவான இணை நோய்கள் எதுவும் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் களுடைய உடல் நிலை குறித்து தினசரி கண்காணிக்கப்படுகிறது.
மேலும், அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதி இல்லை. அவர்களுக்கு உதவி செய்வதற்காக செல்போன் எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் ஏதாவது தேவை எனில் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago