குமாரபாளையம் துணை மின் நிலையம் அருகே குப்பைகளைக் கொட்டி, தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்வாரியத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் முருகேசன், காவல்நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்:
குமாரபாளையம் துணை மின் நிலையத்தின் கம்பி வேலி ஓரத்தில் சிலர் தேவையற்ற குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகிறார்கள். தீ வைக்கும் இடத்தின் அடிப்பகுதியில், உயர் அழுத்த மின்சாரம் கேபிள் மூலமாக குமாரபாளையம் நகர் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. கேபிள் சேதமானால் குமாரபாளையம் நகரம் முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும்.
மேலும், இந்த இடத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பல கோடி மதிப்புள்ள தளவாடங்கள் எரிந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா கால கட்டத்தில் மின் வாரிய அலுவலகத்தில் பணிகள் மேற்கொள்ளும் போது, தேவையற்ற கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால் மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது. எனவே, இங்கு குப்பைகளைக் கொட்டவும், தீயிட்டு எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago