விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசுவெடிப்பது உள்ளிட்ட வெற்றிக்கொண்டாட்டங்களை வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர்,செஞ்சி, மயிலம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், விழுப்புரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 7 தொகுதிகளிலும் 102 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில்விழுப்புரம் தொகுதியில் அதிகபட்சமாக 25 பேர் போட்டியிட்டனர்.
இந்த 7 தொகுதிகளிலும் மொத்தம் 13,27,904 பேர் வாக்களித்துள்ளனர். 79.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாககூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்திமுடிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணிக்குள்ளாக அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படியும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெற்றி பெறும் வேட்பாளர்கள் நாளை வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்போ அல்லது சாலைகள் போன்ற பொதுஇடங்களிலோ ஒன்றுகூடி பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது போன்ற வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago