விழுப்புரத்தில் அதிகளவு பயணிகளை ஏற்றிய - 7 பேருந்துகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிய 7 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து செல்ல வேண்டும். நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிகளை மீறி பேருந்துகள் இயக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

கடந்த 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸார் விழுப்புரத்தில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த 5 தனியார் பேருந்துகள், திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த 2 தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேருந்துகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுதொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்