பாரதிதாசனின் 131-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைகளுக்கு நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம் மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் க.கோபிநாத், தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் எஸ்.சேகர், மு.செல்வம், எம்.ஆர்.ரகுநாதன், பாரதிதாசன் உயராய்வு மைய இயக்குநர் அ.கோவிந்தராஜன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் பல்கலைக்கழக செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் கி.வெற்றிவேல் உள்ளிட்டோர் காஜாமலை வளாகத்தில் உள்ள பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
கரூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்கக் கால புலவர்கள் நினைவுத் தூண் அருகில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்த நினைவுத் தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் படத்துக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வெ.ஜோதி மாலை அணிவித்தார்.
திருக்குறள் பேரவை குறள்பாட்டு தமிழ்ச் சிறப்பிதழை திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை.பழனியப்பன் அறிமுகம் செய்து வெளியிட, வெ.ஜோதி பெற்றுக்கொண்டார்.
திருவாரூரில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நேற்று நடைபெற்ற பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் அறக்கட்டளையின் தலைவர் செல்வகணபதி தலைமை வகித்தார்.
தமிழ்ச்சங்க செயலாளர் அறிவு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முத்தமிழ் பண்பாட்டுப் பாசறைத் தலைவர் ஆரூர் சீனிவாசன், பாரதிதாசன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் தர்மதாஸ், அசோக்குமார், பழனி, மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். தொழிற்சங்க கூட்டமைப்புச் செயலாளர் பால தண்டாயுதம் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago