சின்னதாராபுரம் அருகே நேற்று மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் குரும்பப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(60). இவரது மனைவி மகேஸ்வரி(55). இவர்களின் மகன் பிரதீப்(33), மருமகள் பிரதீபா(31). இவர்கள் அனைவரும் ஆறுமுகத்தின் 2-வது மகனின் திருமண அழைப்பிதழை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வழங்கிவிட்டு, அங்கிருந்து காரில் கரூருக்கு நேற்று வந்துகொண்டிருந்தனர். காரை பிரதீப் ஓட்டினார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த சூடாமணி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப், ஆறுமுகம், மகேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர். பிரதீபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் அருகே...
பெரம்பலூர் அருகே டிப்பர் லாரியும், தனியார் பேருந்தும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 21 பயணிகள் காயமடைந்தனர்.அரியலூரிலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் பேருந்து, கொளக்காநத்தம் வழித்தடத்தில் பெரம்பலூர் நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது.
பாடாலூர் அருகே காரை- தெரணி பிரிவு சாலையில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரியும், தனியார் பேருந்தும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை(70), கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி(32), சுசீலா(55), களரம்பட்டியைச் சேர்ந்த சித்ரா (48), தெரணியைச் சேர்ந்த கல்பனா (35), கருடமங்கலத்தைச் சேர்ந்த பரமசிவம்(51), கூத்தூரைச் சேர்ந்த பிரதிபா(21), துறைமங்கலத்தைச் சேர்ந்த அஞ்சலை (50), கொளத்தூரைச் சேர்ந்த கோமதி(19) உட்பட 21 பயணிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்த பாடாலூர் போலீஸார் அங்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், செல்வி, சித்ரா, கல்பனா உள்ளிட்ட 5 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் செய்து, விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago