மூன்றாயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தினந்தோறும் அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு பிறப்பித்த முழு ஊரடங்கு காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்த வியாபாரிகள், அதன் பிறகு ஏற்படுத்தப்பட்ட தளர்வுகள் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக வியாபாரத்தை விரிவுப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கரோனா 2-வது அலை காரணமாக தற்போது மீண்டும் கடைகளை மூட அரசு அறிவித்த உத்தரவு பெரிய வியாபாரிகளை நிலைக்குலைய செய்துள்ளது. இதற்கிடையே, வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் வேலூர் சண்முகனடி யார் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கரோனா 2-வது அலை தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தற்போது முழு நேர ஊரடங்கு அமல்படுத்தாமல் உள்ளனர். இந்நிலையில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூடுவதால் 35 சத வீதம் ஜிஎஸ்டி வரி வசூல் பாதிக் கப்படும்.
இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், 2,500 சதுர அடி உள்ள கடைகளையும் அதிகாரிகள் மூட சொல்கிறார்கள். இதுபோன்ற பாரபட்சம் காட்டு வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து செய்தியாளர் களிடம் மாவட்டத் தலைவர் ஞானவேலு கூறும்போது, ‘‘3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். கரோனா விதிகளை பின்பற்றி கடைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர அனுமதிக்க வேண்டும்.
கரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து வகையிலும் வியாபாரிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்காவிட்டால் முதற்கட்ட மாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். அதைத்தொடர்ந்து, கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடு வோம்’’ என்றார்.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago