வேலூரில் ரகசிய வழியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்த பிரபல ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி கொண்ட ஜவுளி கடைகள் மற்றும் பெரிய ஷோரூம்களை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அறிவுறுத்தின.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சதுர அடி கொண்ட 23 கடைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன. இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புறவழிச்சாலையில் உள்ள ஜவுளிக் கடையின் முன்பக்கமாக உள்ள பிரதான நுழைவு வாயிலை மூடிவிட்டு, ரகசிய வழியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து, கடை ஊழியர்கள் வியாபாரம் செய்வதாக நேற்று காலை தகவல் பரவியது.
அதிகாரிகள் திடீர் ஆய்வு
அதன்பேரில், வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில், மாநகராட்சி 2-வது மண்டல கரோனா கண் காணிப்பாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, ஜவுளிக்கடையில் ரகசிய வழியில் வாடிக்கை யாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் சங்கரன், அந்த ஜவுளி கடைக்கு அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அந்த ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
ஆணையர் எச்சரிக்கை
இது போன்ற தவறு இனிமேல் நடைபெற்றால் மூன்று மாத காலத்துக்கு ஜவுளி கடையை மூடி விட வேண்டியிருக்கும் என மாநகராட்சி ஆணையர் சங்கரன் எச்சரிக்கை விடுத்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago