அஞ்சல்துறை நடத்தும் குழந்தைகளுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு முகாமில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க ஏப்.30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே சிறப்பு தபால்தலை சேகரிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம் சார்பில், வரும் மே மாதத்தில் ஆன்லைன் மூலம் கோடைகால முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம் வரும் மே 5-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 4 தொகுதிகளாக நடத்தப்படுகிறது. 8 முதல் 14 வயதுக்கு உட்பட்ட ஆர்வமுள்ள குழந்தைகள் ஒரு நபருக்கு ரூ.250 பதிவு கட்டணம் செலுத்தி இந்த முகாமில் சேரலாம்.
நுழைவுக் கட்டணத்தை, காசோலை அல்லது டிடியை ‘தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002' என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர், கைபேசி எண், வயது, முகவரி, மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, வகுப்பு, காசோலை அல்லது டிடியின் விவரங்கள் குறிப்பிட்டு விரைவுத் தபால் அல்லது பதிவுத் தபால் மூலமாக ‘தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002’ என்ற முகவரிக்கு ஏப்.20-க்குள் அனுப்ப வேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெற 9600113460 என்ற கைபேசி எண்ணிலும், 044-28543199 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி சு.குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago