புதுக்கோட்டையில் - நீதிமன்றத்திலிருந்து தம்பியுடன் சென்ற அண்ணன் வெட்டிக் கொலை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கூத்தாடிவயல் ஏரியில் கடந்த 2019-ல் சவுடுமண் அள்ளப்பட்டது. அங்கு, பொக்லைன் வாகனங்களை இயக்கும் பணியில் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23), திண்டுக்கல் மாவட்டம் பேயம்பட்டி சின்னையா மகன் முத்துராஜா(31), சாணார்பட்டியைச் சேர்ந்த செல்லாண்டி மகன் கருப்பசாமி(28), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வளையங்குளத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் பொன்னையா(22) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 2019 மார்ச் 18-ம் தேதி, செல்போனை ஓசி தர மறுத்த தகராறில், இசக்கிமுத்துவை சக பணியாளர்கள் பொக்லைன் இயந்திரத்தால் இடித்து கொலை செய்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜரான பொன்னையா, தனது அண்ணன் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, புதுக்கோட்டையை அடுத்த செல்லுகுடி பகுதியில் சென்ற இருவரையும், இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழி மறித்து வெட்டியதில், காயங்களுடன் பொன்னையா தப்பியோடிவிட்டார். விஜயகுமார் உயிரிழந் தார்.

திருக்கோகர்ணம் போலீஸார் அங்கு சென்று விஜயகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த பொன்னையாவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் பழிக்குப்பழியாக நடந்ததா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்