ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகள் : 117 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

By செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு காரணமாக ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து இன்றியும், ஆட்கள் நடமாட்டமின்றியும் அனைத்து சாலைகளும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பல்வேறு தளர்வு களுடன் கூடிய கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி, நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு நேற்று கடைபிடிக் கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாகன போக்கு வரத்து இன்றியும், ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் நேற்று வெறிச்சோடின. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பால் விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. வேலூரில் ஒரு சில முக்கிய உணவகங்களில் பார்சல் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. அம்மா உணவகம் வழக்கம்போல் இயங்கியது.

வேலூர் மாவட்டத்தில் எப் போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, காட்பாடி சாலை, லாங்கு பஜார், மெயின் பஜார், காந்தி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் ஆரவாரமின்றி அமைதியாக காணப்பட்டது. மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ் ஆகியவை மூடப்பட்டிருந்தன.

வேலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இல்லாததால் பேருந்து நிலையங்கள் வெறிச் சோடின. காட்பாடி ரயில் நிலை யம் வழியாக குறைவான ரயில்கள் இயக்கப்பட்டதால் வெளி மாநிலம் செல்லும் வட மாநில தொழிலாளர்கள் நீண்ட நேரம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்து ரயில் வந்தவுடன் ஏறிச்சென்றனர்.

அதேபோல, காட்பாடி சுற்று வட்டாரப்பகுதிகளில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் ரயில் நிலையம் வர பேருந்து வசதி இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து ரயில் நிலையத்துக்கு நடந்தே வந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்களை திறக்க அனுமதியில்லை என்பதால் ஒரு சில கோயில்கள் நேற்று காலை திறக்கப்பட்டன. அங்கு பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆகமவிதிப்படி கோயில் குருக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டன.

ஒரு சில கோயில்களில் நேற்று அதிகாலை திருமணம் நடைபெற்றது. அங்கும் குறைந்த அளவி லான மக்கள் கலந்து கொண்ட னர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அரசின்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமண விழாவில் பங்கேற்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்கடை, காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மூடப் பட்டிருந்தாலும் கிராமப்பகுதிகளில் இறைச்சி, காய்கறி விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் அதிகாலை நேரங்களில் இறைச்சி விற்பனை நடைபெற்றது. ஞாயிற் றுக்கிழமை பொது முடக்கம் என்பதால் கடந்த வாரத்தை காட்டி லும் இந்த வாரம் இறைச்சியின் விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை இரவு 10 மணிக்கே காவல் துறை யினர் நகரின் முக்கிய சாலை களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவசியம் இல்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். வேலூர் மாவட்டத்தில் 46 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு எஸ்பி செல்வகுமார் தலைமை யில் 700 காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தூய்மைப்பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் பயன்பாட் டுக்காக வேலூர் நகர் பகுதியில் குறைந்த அளவில் அரசுப் பேருந்து கள் நேற்று இயக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 450 காவலர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப் புப்பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொது முடக்கம் காரணமாக உணவின்றி சாலைகளில் தவித்த ஆதரவற்றவர் களுக்கு எஸ்பி டாக்டர் விஜய குமார் உணவு வழங்கினார். பொது முடக்கத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மாவட்டம் முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துவ மனைகள், மருந்தகங்கள் மட்டும் இயங்கின. சரக்கு வாகனங்கள் செல்ல தடையில்லாததால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள் தடையில்லாமல் சென்றன.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 550 காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பேருந்து நிலையங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்கெட் பகுதிகள், பஜார் பகுதிகள், முக்கிய சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

முக்கிய சாலைகளின் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் அவ் வழியாக அவசியம் இல்லாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை காவலர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு திங்கள்கிழமை (இன்று) அதிகாலை 4 மணியுடன் நிறைவுப்பெற்றது. கிட்டத்தட்ட 30 மணி நேரம் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்