கடலூர் அருகே கிராமப் பகுதிகளில் - காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க வயல்வெளிகளில் செயல் விளக்கம் :

By செய்திப்பிரிவு

கடலூர் அருகே குணமங்கலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கரும்பு பயிரில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேளாண்துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது கடலூர் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியது:

சாகுபடி பயிர்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க குறைந்த செலவில் உயிரியியல் முறையில் வரப்புகளில் சேபிளவர் (குசும்பா) எனப்படும் எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் உயிர்வேலி மரங்களை வளர்ப்பது பயன்தரும். காட்டுப்பன்றிகளை சாகுபடி நிலத்திற்கு வராமல் விரட்டி அடிக்க வேலூர் விரிஞ்சிபுரம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக திரவம் வரவழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை விரட்டி திரவத்தின் செயல்திறன் 3 மாதங்கள் வரை நீடித்து இருப்பதால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமைகிறது.

இதனை நெல், கேழ்வரகு,சூரியகாந்தி, பப்பாளி, வாழை, கரும்பு, மரவள்ளி மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களில் காட்டுப்பன்றிகள் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 500 மி.லி திரவம் தேவைப்படும்.பயிர் செய்திருக்கும் நிலத்தை சுற்றி வரப்புகளில் 2 அடி உயரம் உள்ள குச்சிகளை 10 அடி தூரத்திற்கு ஒன்று என்ற வீதம் ஊன்ற வேண்டும். பின்னர் ஒன்றரை அடி உயரத்தில் சணல் அல்லது கம்பி கொண்டு இணைத்து கட்ட வேண்டும். மேலும் இரண்டு குச்சிகளுக்கு நடுவில் ஒரு சிறிய டப்பாவை கட்டி திரவத்தினை 5 மி.லி அளவில் ஊற்றி மூடவேண்டும். இவ்வாறு செய்வதால் மழை நீர் உட்புகுந்து மருந்தின் வீரியத்தை குறைக்காது. டப்பாக்களில் பக்கவாட்டு துளைகள் இடுவதனால் இந்த திரவத்தின் வாசனை வெளி வந்து தொடர்ந்து காட்டுப்பன்றிகளை வயலில் வர விடாமல் செய்கின்றன என்றார். கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் இந்த செயல்விளக்கத்தைப் பின்பற்றி இதர விவசாயிகளும் தங்களது வயல்களில் காட்டுப்பன்றிகளின் தாக்குதலை வெகுவாக குறைந்த செலவில் கட்டுப்படுத்தலாம் என்றார்.

செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிவமணி,அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்