ஊரடங்கால் ஏலம் விடும் நேரம் மதியம் 2 மணிக்கு மாற்றம் - சந்தைக்கு காய்கறிகளை கொண்டு செல்வதில் சிக்கல் : பாவூர்சத்திரம் வட்டார விவசாயிகள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், பாவூர்சத் திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள் ஏலம் விடப்பட்டு, மொத்த விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மாலை வரை விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகள் மாலை 4 மணியளவில் ஏலத்தில் விடப்படும்.

அதன் பின்னர் வாங்கப்பட்ட காய்கறிகளை வியாபாரிகள் லாரிகள், வாகனங்களில் ஏற்றிச் செல்வார்கள். இரவு 12 மணி வரை காய்கறிகள் லோடு ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளையும் இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் ஏலம் விடப்படும் நேரத்தை வியாபாரிகள் மாற்றியுள்ளனர்.

ஏலம் நேரம் மாற்றம்

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “ஏப்ரல் 21-ம் தேதி முதல் காய்கறிகள் ஏலம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். விற்பனையான காய்கறிகளை இரவு 9 மணிக்குள் வாகனங்களில் ஏற்றி அனுப்பி விட்டு, கடைகள் அடைக்கப்படும். இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை முன் கூட்டியே கொண்டுவர வேண்டும். தாமதமானால் அன்றைய தினத்தில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “காலையில் விவசாய நிலங்களுக்குச் சென்றால் கூலியாட்கள் மூலம் காய்கறிகளை பறித்து, மூட்டைகளில் கட்டி, வாகனத்தில் ஏற்றி, சந்தைக்கு கொண்டு வர மாலை 4 மணி ஆகிவிடும். 12 மணிக்குள் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு செல்வது சாத்தியமில்லாதது. அதிகாலையிலேயே கூலியாட்கள் வேலைக்கு வந்தால்தான் 12 மணிக்குள் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். பறிக்கப்பட்ட காய்கறிகளை அன்றைய தினத்திலேயே விற்பனை செய்ய முடியாமல் இருப்பு வைத்திருந்து மறு நாள் விற்பனை செய்வது கடினம்.

விவசாயிகள் பாதிக்கப்படு வதைத் தவிர்க்க சந்தைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்