வேலூரில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 40 இடங்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பாக நேற்று ஒரே நாளில் 297 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுத் துள்ளது. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை தாமாக முன் வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.
அதன்படி, கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் ‘தடுப்பூசி திருவிழா’ என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், இந்த வாரத்துக்கான தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்டத்துக்கு இதுவரை வரவில்லை எனக்கூறப்படுகிறது. தடுப்பூசி மருந்து இருப்பு இல்லாத காரணத்தால், வேலூர் மாவட்டத்தில் 40 இடங்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டன.
பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக இருந் தாலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் தடுப்பூசிக்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தடுப்பூசி மருந்து இருப்பு குறைவாக உள்ளது. மருந்து வரவில்லை எனக்கூறுவது தவறு. இருப்பு குறைவாக இருப்பதால் சிறப்பு முகாம்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 12,000 தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன. இதைக்கொண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறையிடம் கூடுதலாக மருந்துகள் கேட்டுள்ளோம், வந்த பிறகு சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago