வேலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊடரங்கு நேற்று முன்தினம் இரவு அமலுக்கு வந்ததால் வேலூர் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தடை விதிக் கப்பட்டது.
மேலும், தனியார் பேருந்துகள், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பணிகளை தவிர இரவு நேர ஊரடங்கை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அரசு தரப்பில் எச் சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவற்கான முன்னேற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர். மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மருந்துக்கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் இரவு 9.30 மணிக்கு முன்பாக மூடப் பட்டன.
வேலூர் மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் மூடப் பட்டன. ஒரு சில உணவகங்களில் மட்டும் பார்சல் வழங்கப்பட்டன. இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறந்துள்ளதா? என்றும், தேவை யின்றி சாலையில் பொதுமக்கள் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா ? என காவல் துறையினர் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
இரவு நேர ஊரடங்கு காரண மாக வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கடைசியாக இரவு 9 மணிக்கு குடியாத்தம் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடைசியாக இரவு 8.30 மணிக்கு காஞ்சிபுரம் பகுதிக்கும், இரவு 9 மணிக்கு ஆற்காடு, வாலாஜா போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தி.மலை செல்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு மேல் வந்தனர். அப்போது, பேருந்துகள் இல்லாத தால், அவர்கள் பேருந்து நிலை யத்திலேயே அதிகாலை 4 மணி வரை காத்திருந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருவண்ணாமலைக்கு இயக்கப் பட்ட பேருந்தில் வடமாநில தொழி லாளர்கள் பயணம் செய்தனர்.
இரவு நேர ஊரடங்கில் பேருந்து இயங்க தடை விதிக்கப்பட்டதால் வேலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல, மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் கிரீன் சர்க்கிள், சிஎம்சி சாலை சந்திப்பு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், அண்ணாசாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில், சித்தூர் பேருந்து நிலையம், குடியாத்தம் சாலை, கிறிஸ்ட்டியான் பேட்டை, காட்பாடி - குடியாத்தம் சாலை, தொரப்பாடி - அரியூர் சாலை, பாகாயம் - ஆரணி சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விதிமுறைகள் மீறி இரு சக்கர வாகனங்கள், கார்களில் வலம் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
இரவு நேர ஊரடங்கின் போது சினிமா தியேட்டர்களில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தெரியாமல் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள ஒரு சில தியேட்டர்களில் இரவு 10 மணிக்கு சிலர் படம் பார்க்க வந்தனர். அப்போது சினிமா தியேட்டர் முகப்பு கேட் மூடப்பட்டு இரவு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் வைத்திருந்த அறிவிப்பு பலகையை பார்த்தபடி திரும்பி வீட்டுக்கு சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago