புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் - பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை : மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திக் மனைவி ரஷியா. கர்ப்பிணியாக இருந்த இவர், உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவரது சிறுகுடலின் முதல் பகுதி (டியோடினம் )வளர்ச்சியின்றி சுருங்கி இருப்பதும், அதனால் பனிக்குட நீர் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தலைமை மகப்பேறு மருத்துவர் அமுதா, பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் அவரை பரிசோதித்து, ஆம்னியோசென்டிசிஸ் என்ற சிறப்பு சிகிச்சை மூலம் அதிகப்படியான நீர் நீக்கப்பட்டது. அதன்பின், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

பிறந்தவுடன் குழந்தைக்கு மூச்சுத்திணறல், வாந்தி ஏற்பட்டதுடன், வயிறு வீக்கம் இருந்தது. அப்போது, குழந்தையை பரிசோதனை செய்ததில் அதன் சிறுகுடல் சுருங்கியும், இரைப்பை அதிக வீக்கத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியம், மயக்கவியல் மருத்துவர் டேனியல் ஆகியோர் அடங்கிய மருத்துவகுழுவினர் குழந்தைக்கு அறுவைசிகிச்சை மூலம் சிறுகுடலின் முதல் பகுதியில் இருந்த அடைப்பை சரிசெய்தனர். பின்னர், வென்ட்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. 3 வார தீவிர சிகிச்சைக்குபிறகு பச்சிளங்குழந்தையம், தாயும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பச்சிளங்குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மு.பூவதி பாராட்டினார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி கூறியது: கரோனா பரவி வரும் இக்கட்டான சூழலிலும்கூட பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றியது பாராட்டத்தக்கது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்