கரோனா தொற்று பரவல் எதிரொலி - சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை : நுழைவு வாயிலை மூடி ‘சீல்' வைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் அதி வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் எதிரொலியாக, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமையில் முழு ஊரடங்கு, பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அணையை சுற்றி பார்க்கவும், அணையில் உள்ள பூங்காவில் விளையாடி மகிழவும் மற்றும் முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை யொட்டி, சாத்தனூர் அணையின் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சாத்தனூர் அணையின் நுழைவு வாயில் கதவில் பொதுப்பணித் துறையினர் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், “கரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் அறிவுரைப்படி சாத்தனூர் அணை பூங்கா 20-ம் தேதி (நேற்று) முதல் அரசின் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜவ்வாதுமலையில் உள்ள கோலப்பன் ஏரி மற்றும் பீமன் நீர்விழ்ச்சிக்கு செல்லவும் பொது மக்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்