வரும் மே மாதம் வரை கடைகளில் - பட்டாசு இருப்பை குறைவாக வைத்திருக்க வேண்டும் : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுரை

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வரும் மே மாதம் வரை பட்டாசு கடைகளில் பட்டாசு இருப்பு குறைவாக வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள லத்தேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பட்டாசு கடை உரிமை யாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘அனைத்து பட்டாசு கடைகளிலும் உரிமையாளர் மற்றும் அங்கீகரிக் கப்பட்ட நபர்கள் தவிர சிறுவர்கள், உறவினர்கள் மற்றும் கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் கடையின் உள்ளே எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

கோடை காலம் என்பதால் அனைத்து பட்டாசு கடை உரிமையாளர்களும் வரும் மே 30-ம் தேதி வரை கடையில் பட்டாசு இருப்பை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக சக்திவாய்ந்த பட்டாசுக்களை கடைகளில் இருப்பு வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். கடையில் தீயணைப்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதையும், அவசர காலங்களில் அதை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உரிமையாளர்கள் கடையில் பணிபுரியும் நபர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கடைக்கு அருகில் குறைந்த உயர் மின் அழுத்த மின் கம்பிகள் ஏதேனும் இருப்பதை பார்க்க வேண்டும். மின்கம்பிகளால் கடைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என உரிமையாளர்கள் உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தெரிவித்து சரி செய்ய வேண்டும்.

பல மணி நேரம் அல்லது விடிய விடிய ஒரே மின் விளக்கை எரியவிடாமல் மாற்று மின் விளக்குகள் மூலம் எரிய வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு சில்லறை விற்பனை கடைகளும், தயாரிப்பு கிடங்குகளை தணிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது’’ இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்