நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆரம்ப நிலையிலேயே அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு 147 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் கரோனா தொற்று அதிகபட்சமாக இருந்த காலத்தில் மட்டுமே 150 வரை வந்தது. இந்த முறை ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது கவலைக்குரியதாகும்.
எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்களிடம் உள்ள வாகனங்களில் கரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளும்போது அரசின் உபகரண வசதிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமிநாசினி மற்றும் சோப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட அரசு அறிவுறுத்தியுள்ள தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாது பின்பற்ற வேண்டும். கரோனா தற்போது குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரையும் பாதிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த லாரி ஓட்டுநர்கள் தாங்களாகவே கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா பாதித்தவர்கள் 3 பேருக்கு மேல் இருந்தால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.சித்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago