கரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக - ஊரடங்கில் தளர்வு கோரி இசைக் கலைஞர்கள் மனு :

By செய்திப்பிரிவு

கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கலைநிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு இசைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் நேற்று மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் வந்து நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், “கஜா புயல் பாதிப்பு, கரோனா ஊரடங்கு என கடந்த 2 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கரோனா 2-வது அலையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக சில தளர்வுகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இதேபோல, திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வாடகைப் பொருள்கள் தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், செயலாளர் பொன்.கோவிந்தராஜ், பொருளாளர் ஹரி வெங்கட் மற்றும் நிர்வாகிகள் நேற்று அளித்த மனுவில், “வாடகைப் பொருட்கள் தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில், ஊரடங்கில் உரிய தளர்வுகளை அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம், தமிழ்நாடு ஒலி- ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் நேற்று அளித்த மனுவில், “கரோனா கட்டுப்பாடு தளர்வுகளுடன் திருவிழாக்களை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தோழர் ஜீவா, அம்பேத்கர் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு வேடங்கள் அணிந்துவந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் அளித்த மனுவில், “கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலைநிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.

மூத்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், செயலாளர் ஏ.பொய்யாமொழி, பொருளாளர் சி.எச்.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில்,“கரோனா கட்டுப்பாடுகளுடன் மதம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்