மூலப்பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்தால் - குறுந்தொழில்களில் வேலையின்மை நிலை ஏற்படும் : சிட்கோ தொழிற்பேட்டை குறுந்தொழில் நிறுவனத்தினர் தகவல்

By பெ.ஸ்ரீனிவாசன்

மூலப்பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்தால் வேலையின்மை என்ற நிலையை எட்டி விடுவோம் என சிட்கோ தொழிற்பேட்டை குறுந்தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை மாவட்டமான கோவையில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், வெட்கிரைண்டர், ஜவுளித்துறை உற்பத்திக்கான இயந்திரங்கள் தயாரிப்பு என தொழில்கள் விரிவாக பரவியுள்ளன. இந்நிலையில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சமீப காலமாக மூலப்பொருள் விலை உயர்வு என்பது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் காஸ்டிங், கன்மெட்டல், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட அனைத்து வகை உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சிலவற்றின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது, என்கின்றனர் தொழில் துறையினர். மூலப்பொருட்கள் விலை உயர்வால் பெரிய நிறுவனங்களே திணறி வரும் நிலையில், ஜாப் ஆர்டர்களை மட்டுமே நம்பியுள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் நல்லதம்பி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

சிட்கோ தொழிற்பேட்டையை பொறுத்தவரை 235 குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பவுண்டரி, ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், பேப்ரிகேசன் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

கோவையில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு அதிகளவில் ஜாப் ஆர்டர்கள் கிடைக்கின்றன. தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வு எங்களைப் போன்ற ஜாப் ஆர்டர் மூலமாக தொழில் செய்து வரும் குறுந்தொழில் முனைவோரை கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் ஆர்டர் எடுக்கும்போது இருந்த மூலப்பொருட்களின் விலையை விட தற்போது பல மடங்கு விலை அதிகரித்துள்ளது. தற்போது உயர்ந்துள்ள மூலப்பொருட்களின் விலைக்கு ஏற்ப ஆர்டர்களை அளித்த நிறுவனங்கள் கூடுதல் தொகை தர மாட்டார்கள். எங்களாலும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ள கூடுதல் விலை கொடுத்து மூலப்பொருட்களை வாங்கி, ஆர்டர்களை செய்ய முடியாது. இதனால் ஆர்டர்கள் இருந்தும், தற்போது அவற்றை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 'நோ ஒர்க்' எனப்படும் வேலையின்மை, வேலையிழப்பு என்ற நிலையை எட்டி விடுவோம்.

மத்திய அரசு, உடனடியாக மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை போன்று மூலப்பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்தால் தொழில்துறையினர் என்ன செய்ய இயலும். 6 மாதங்களுக்கு ஒரு முறை மூலப்பொருட்கள் விலையை, அப்போது உள்ள சூழலுக்கு ஏற்ப அரசு நிர்ணயிக்க வேண்டும். மேலும் இதற்கென கண்காணிப்பு குழு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். அதில் பெரு நிறுவனத்தினர் முதல் குறுந்தொழில் முனைவோர் வரை உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த குழு இதனை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பெரு நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என 1.5 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறுந்தொழில் முனைவோர்களாக உள்ளனர். இவர்களது பிரதான நம்பிக்கையே ஜாப் ஆர்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்