கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறினால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும் எச்சில் துப்பக்கூடாது. அவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வெளியிலும், வீட்டிலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து நடமாட வேண்டும். கூடுமான வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் சோப்புக் கரைசலால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
படித்த இளைஞர்கள், மாணவர்கள் கரோனா நோய்த் தொற்று குறித்த விவரங்களை புரிந்துகொண்டு தங்கள் வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கரோனா நோய் பரவும் தன்மை குறித்தும் தடுப்பூசியின் அவசியத்தையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை 04633- 290548 அல்லது 1077 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் எந்நேரமும் தெரிவிக்கலாம். கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago