விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வு வரும் 23- ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 154 மையங்களில் நடைபெற்று வருகிறது. 184 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 173 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்றுள்ளனர். தேர்வு மையங்களில் 821 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 180 மையங்களில் பிளஸ் 2 மாண வர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. 236 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 27 ஆயிரத்து 16 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்றுள்ளனர். தேர்வு மையங்களில் ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேர்வு மையத்திற்கு வருகை புரிந்த ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன், தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது மேலும், சானிடைசர் அல்லது சோப்பு கொண்டுகைகளை சுத்தம் செய்த பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
புதுச்சேரி
தமிழகத்தின் கல்வித் திட்டத்தை புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றுகின்றனர். தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தேர்வுகள் நடந்தன.புதுச்சேரியில் மொத்தம் 126 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கரோனாவால் அனைத்து பள்ளிகளும் அரசு செய்முறை தேர்வுகளுக்கான மையங்களாக மாற்றப்பட்டு இத்தேர்வு தொடங்கியது. மொத்தம் 377 ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக இருந்தனர்.
இதுதொடர்பாக கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டதற்கு, “இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகளில் 12,426 பேர் பங்கேற்கின்றனர். முதல் நாளில் 7,500 பேர் பங்கேற்றனர்.
சமூக இடைவெளியுடன் முகக்கவசம், கையுறை அணிந்து தேர்வில் பங்கேற்றனர். மூன்று டேபிள்களுக்கு ஒரு இடத்தில் சானிடைசர் பயன்படுத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் முதலில் கைகளை கழுவிய பின்னர் சானிடைசர் தரப்பட்டு, வெப்பநிலை பரிசோதித்து கையுறை தரப்பட்டு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களை கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு ஆய்வு செய்தது” என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago