தமிழகத்தில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்க முடிவு : நபார்டு வங்கி பிராந்திய தலைமை பொது மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன என நபார்டு வங்கியின் தமிழ்நாடு பிராந்திய தலைமைப் பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் மதிப்புக் கூட்டிய பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

நபார்டு வங்கியின் பிராந்திய தலைமைப் பொது மேலாளர் செல்வராஜ் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்காக அரசு சார்ந்த நிறுவனங்கள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் மூலம் நபார்டு வங்கி ரூ.27 ஆயிரம் கோடி அளவில் கடனுதவி வழங்கியுள்ளது. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் குழுக்கள், பொறுப்புக் குழுக்கள், பழங்குடியினர் வாழ்வாதார முன்னேற்றம், நீர்பிடிப்புப் பகுதியில் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் மற்றும் நுண் கடன் போன்ற வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தலுக்காக ரூ. 31 கோடி இலவச நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய மீனவ விவசாய உற்பத்தியாளர் குழுக்களை அமைப்பதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை இலவச நிதியுதவி வழங்கப்படுகிறது.

மத்திய அரசு மூலமாக தமிழகத்தில் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. ஒரு குழுவுக்கு ரூ. 45 லட்சம் வரை இலவச நிதியுதவி கிடைக்கும், என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE