அரசுப் பேருந்தில் முதியவரை தாக்கிய நடத்துநர் - போக்குவரத்துக் கழக இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் :

By செய்திப்பிரிவு

அரசுப் பேருந்தில் பயணித்த முதியவரை, நடத்துநர் தாக்கியது தொடர்பாக, அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர், மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்தவர் கணேசன் (73). காய்கறி வியாபாரி. கடந்த 12-ம் தேதி காலை, இவர் கோபியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசுப் பேருந்தில், சித்தோட்டில் இருந்து ஈரோட்டுக்கு பயணம் செய்துள்ளார். பயணச்சீட்டுக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக, பேருந்து நடத்துநர் குமாருக்கும், முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது நடத்துநர் குமார், முதியவர் கணேசனை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களில் செய்தியும் வெளியானது.

இதையடுத்து அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி, முதியவரை தாக்கிய கவுந்தப்பாடி பணிமனையைச் சேர்ந்த நடத்துநர் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, மூன்று வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கோவை அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்