சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஏற்காடு, காடையாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி இறுதியில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. வெயில் படிப்படியாக அதிகரித்து ஏப்ரலில் அதிகபட்சமாக 109.1 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. நாளுக்கு நாள் அதிகரித்த வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 42 மிமீ மழை பதிவானது.
மழையால் ஏற்காடு மலைக் கிராமங்கள், ஏற்காடு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மின் தடையும் ஏற்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: கரியகோவில்35 மிமீ, ஆனைமடுவு 27, காடையாம்பட்டி 19, தம்மம்பட்டி 15, சங்ககிரி 14.30, சேலம் 10.50, எடப்பாடி 9, ஓமலூர் 7.40, மேட்டூர் 7.50, ஆத்தூர் 6.40, பெத்தநாயக்கன்பாளையம் 4, வாழப்பாடி 3 மிமீ மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வறட்டுப்பள்ளத்தில் 100 மிமீ மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. கொடுமுடி மற்றும் வறட்டுப்பள்ளத்தில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. மழை காரணமாக பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வறட்டுப்பள்ளத்தில் 100. 4 மி.மீ, கொடுமுடி 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மழையளவு விவரம் (மி.மீட்டரில்): பவானி 89, நம்பியூர் 85 , சென்னிமலை 76, ஈரோடு 70, தாளவாடி 60, கவுந்தப்பாடி 52, அம்மாபேட்டை 48, மொடக்குறிச்சி 45, குண்டேரிப்பள்ளம் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago