கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதோடு, இயற்கைச் சூழல் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல், இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கக்கூடாது, என நபார்டு வங்கி தலைமை பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகப் பாசனம் பெறுகின்றன. இந்த வாய்க்காலின் கசிவு நீர் மூலம் 36 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணை முதல் கடைமடையான மங்கலப்பட்டி வரை கசிவு நீர், பிற கிணறுகள் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
இந்த வாய்க்கால் கரையை பலப்படுத்தி கான்கிரீட் தளம் அமைக்க, 2013-ல் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை கைவிட்டார். தற்போது, ரூ.709.60 கோடியில், கீழ்பவானி சீரமைப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சில அமைப்புகள், தற்போது திடீரென மனம் மாறி திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் மு.ரவி மற்றும் விவசாயிகள், நபார்டு வங்கி தலைமை பொது மேலாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டு, விவசாயிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது, கீழ்பவானி வாய்க்காலில் 125 மைல் தூரம் நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்து, புதுப்பித்தல் செய்ய ரூ.709.60 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். 34 கசிவு நீர் திட்டம் மூலம் பயன்பெறும், பாசன நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படும். வாய்க்கால் கரையில் உள்ள மரங்கள் சீரமைப்பு என்ற பெயரில் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்படையும். எனவே, இப்பாசனத்தால் பயன் பெறும் விவசாயிகளிடம் முறையாக கருத்து கேட்காமல், திட்டத்துக்கு நபார்டு வங்கி நிதியுதவி வழங்கக் கூடாது. இத்திட்டம் குறித்து முறையான கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி, முழு ஆய்வுக்குப்பின்னர் நபார்டு வங்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago