திடீர் கோடை மழையால் குளிர்ந்த வேலூர் மக்கள் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த திடீர் கோடை மழையால் வெயிலின் உக்கிரம் குறைந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. சராசரியாக 99 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்ததுடன் பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால் குழந்தைகளும், முதியவர்களும் பெரிதும் அவதிப்பட்டனர். இந்தாண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்களும் தொண்டர்களும் பிரச்சாரம் செய்ய முடியாமல் திணறினர். அனல் காற்றுடன் சுட்டெரித்த வெயிலால் இறுதி கட்ட பிரச்சாரம் களையிழந்து காணப்பட்டது.

மார்ச் 30-ம் தேதி திடீரென உயர்ந்த வெயிலின் அளவு 106.3 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதி கரித்தது. அதன் பிறகு மார்ச் 31-ம் தேதி 106.7 ஆகவும், ஏப்ரல் 1-ம் தேதி 109.2, ஏப்ரல் 2-ம் தேதி அதிகபட்சமாக 110.1 ஆகவும், ஏப்ரல் 3-ம் தேதி 108.5 ஆகவும், ஏப்ரல் 4-ம் தேதி 101.5 டிகிரி என படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆனாலும், சராசரியாக 99 டிகிரி அளவுக்கு அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தாலும் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த இடி சத்தத்துடன் திடீரென மழை பெய்தது. வேலூர், பொன்னை, காட்பாடி, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது. வேலூரில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. திடீர் கோடை மழையால் பகல் நேரத் தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்