திருப்பத்தூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கப்பணம், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச்சென் றுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு பெங்களூருவில் சொந்தமான வீடு உள்ளது. பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வரும் முருகன் அதை கவனிக்க அங்கேயே தனது குடும்பத்தாருடன் குடியேறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முருகன், அவரது மனைவி சாரதா ஆகியோர் வாக் களிப்பதற்காக கடந்த 4-ம் தேதி மோட்டூர் கிராமத்துக்கு வந்தனர். பிறகு வாக்குப்பதிவு முடிந்த பிறகு முருகன் தனது குடும்பத்தாருடன் பெங்களூரு வுக்கு புறப்பட்டார். கந்திலி அடுத்த மாங்குப்பம் கிராமத்தில் முருகன் திருமண மண்டபம் ஒன்றை கட்டி வருகிறார்.
இந்நிலையில், முருகனின் மைத்துனரான ராமு என்பவர் நேற்று காலை முருகன் வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்துக்கிடந்தது. பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர், பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
உடனே, முருகனுக்கு ராமு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த முருகன் வீட்டில் சோதனையிட்டபோது பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள், திருமண மண்டபம் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் ரொக்கப்பணம், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள் என அனைத் தும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் முருகன் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago