மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை முடிந்து 3 மாத காலமாகியும் அதற்குரிய தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை, என விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கரும்பு அரவை தொடங்கப்படுவது வழக்கம். கடந்தாண்டுக்கான கரும்பு அரவை கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 12-ம் தேதி வரை நீடித்தது. ஆலையில் மொத்தம் 1.14 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. ஆலைக்கு கரும்பு வழங்குவோருக்கு உடனடியாக அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்.
இந்நிலையில் கரும்பு அரவை முடிந்து 3 மாதமாகியும் இதுவரை அதற்குரிய தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும் விவசாயிகள் கூறியதாவது:
ஆலையின் மொத்த அரவைத் திறன் 4.50 லட்சம் டன் ஆகும். எனினும், கரும்பு சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஆலைக்கு வரும் கரும்பின் அளவு குறைந்து வருகிறது. இந்தாண்டு 1.14 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. அரவைக் காலம் முடிந்து 3 மாத காலமாகியும் இதுவரை விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதில், 50 முதல் 60 ஆயிரம் டன் அளவுக்கான தொகை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பாதித்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை விவசாயிகளுக்கு எவ்வித நிலுவையும் வைத்தது இல்லை. ஆனால், இம்முறை விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படாததால் மீண்டும் ஆலைக்கு கரும்பு பதிவு செய்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். காலதாமதம் செய்யாமல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் கே.பி.எஸ். சுரேஷ்குமார் கூறுகையில், ஆலையில் இருந்து ஸ்பிரிட் விற்பனை செய்த தொகை வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அந்த தொகை வந்தவுடன் விவசாயிகளுக்கான தொகை வழங்கப்படும். ஆலை மொத்தம் 60 நாட்கள் இயங்கியது. அதில் 22 நாட்கள் தொகை மட்டும் நிலுவையில் உள்ளது. அதுவும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்பட்டு விடும். தேர்தல் சமயம் என்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago