கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு மொத்த வியாபாரிகள் வருகை இல்லாததால், வர்த்தகம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்குச் சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நிரந்தர ஜவுளிக்கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகள் என தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் ஜவுளிச் சந்தையானது செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெறுவது வழக்கம்.
சந்தைக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கா்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தற்போது கரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் ஜவுளிச் சந்தை முடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது:
வாரந்தோறும் ஜவுளிச்சந்தை யானது திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை பகலில் முடிவடையும். இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நேற்று முன்தினம் இரவு சந்தை நடைபெற மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் வேறுவழியின்றி நேற்று பகலில் தான் கடைகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. சில்லரை வர்த்தகம் மட்டும் குறைந்த அளவில் நடந்துள்ளது.
ஏற்கெனவே தேர்தல் காலத்தில் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளிச்சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா பரவலால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி விற்பனை குறையும் போது, அதன் உற்பத்தித் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளும் செயல்பட முடியாத நிலை ஏற்படும். எனவே, ஜவுளித்தொழில் சார்ந்த சாய, சலவை மற்றும் பதப்படுத்துதல், விசைத்தறி என ஒவ்வொரு துறையும் அடுத்தடுத்து பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago