மராமத்துப் பணிக்காக நீர்வரத்து குறைப்பு - வீராணம் ஏரி நீரின்றி வறண்டது :

By செய்திப்பிரிவு

மராமத்துப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வீராணம் ஏரியின் நீர்வரத்து குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரி 18 கி.மீ. நீளமும், 8 கி.மீ. அகலமும் கொண்டது. இந்தஏரிக்குத் தண்ணீர் மேட்டூர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த ஏரி மூலம் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி பகுதியின் பாசனத் தேவைகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் வீராணம் ஏரியால் உயர்வது உண்டு.

மேலும், இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

வறண்ட ஏரியில் மீன் பிடிக்க மீனவர்கள் பொதுவாக ஆர்வம் காட்டுவதுண்டு. தற்போது நீர்வரத்து குறைந்து, வீராணம் ஏரி வறண்டுள்ள நிலையில், ‘இனப்பெருக்கத்தை பேணும் வகையில் மீன் பிடிக்க அனுமதியில்லை’ என்று மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. சிறுசிறு குட்டைகளாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரில், அதிக வெயில் காரணமாக மீன்கள் செத்து மிதக்கின்றன.

மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு இப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தருணத்தில், தடைகளைத் தளர்த்தி, மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையீட்டு மனு ஒன்றையும் அவர்கள் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு புயல், மழை காரணமாக வீராணம் ஏரி 4 முறை நிரம்பி வழிந்தது. தற்போது, பொதுப்பணித் துறையால் கரைகளை பலப்படுத்தும், வெள்ள கால பாதிப்புகளை சரிசெய்யும் பணி, ஏரிக்கான 28 பாசன வாய்க்கால்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக ஏரியில் இருந்த தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து, வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது.

சென்னைக்கு மாற்று ஏற்பாடு

ஏரி வறண்டுள்ள நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டாலும், வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் விடப்பட்டு, அதை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, வீரணாம் குழாய் வழியாக சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வரையில், இதற்காக பரவனாற்றில் இருந்து விநாடிக்கு 15 கனஅடி வீதம் சென்னைக்கு தண்ணீர் செல்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்